வியாழன், 10 ஜூன், 2021

பொய்..

நீங்கள்
கண்டதுமில்லை
கேட்டதுமில்லை
தீர விசாரித்ததுமில்லை
ஆனால் 'உண்மை' என்கிறீர்கள்!
நான்
'பொய்' என்றுரைத்தால்
கண்டாயா
கேட்டாயா
தீர விசாரித்தாயா என்கிறீர்கள்!
உண்மையில்
உண்மைக்குதான்
கண்கள் வழி
காட்சி தேவை
செவிகள் வழி
செய்தி தேவை
மூளையின் வழி
புரிதல் தேவை!
பொய்யை
பொய்யென்றுரைக்க
உண்மையில்
குறைந்தபட்ச உண்மையேனும்
இல்லாமலிருந்தாலே போதும்!
எனவே பொய்யர்களே, இனியேனும்
நிறுத்துங்கள் உங்கள் பொய்களை!

-சகா..
03/03/2018

செயற்கை சுவாசம்..

தென்றலில்
தலைவாரி
மணல் கொண்டு
ஒப்பனையிட்டு
தன்மலர்களால்
பூச்சூடி அலங்காரமாய்
நிற்கிறது
புங்கை மரங்கள்!!
மகிழுந்தில்
அவ்வியற்கையை
ரசித்தவண்ணம்,
அதற்கு
செயற்கை சுவாசம்
கொடுத்து
சென்றேன்!
-சகா..
14/07/2018

கடவுள்..

சிலை
கடவுளென
அவதரிப்பதும்
கடவுள்
சிலையென
அவதரிப்பதும்
கடவுள்களின்
கடவுள்
கைகளில்!!

-சகா..
07/09/2018

பயங்கரவாதிகள்..

நூற்றுக்கணக்கான
சாளரங்களை
தன்னகத்தே
அடைத்து வைத்திருந்தது
அச்சின்ன பொருள்!
சரியென்று
அதிலொற்றை
சாளரத்தை
திறந்துவிட்டேன்
நாயொன்று
'நான் மட்டுமே இந்தியனென்று'
அலறிக்கொண்டிருந்தது!
அச்சாளரத்தை
மூடியவண்ணம்
மற்றொன்றை
திறந்துவிட்டேன்
பயங்கரவாதி பற்றிய
செய்தி, ஆனால்
பெயர் இடம்மாறியிருந்தது
பிடித்தவனை
தேசியவாதியென்றும்
பிடிபட்டவனை
தேசவிரோதியென்றும்!
பிழைபோலும்
என்றெண்ணி
மூன்றாம் சாளரத்தை
திறந்தவேளை
'டக் டக் டக்'கென்று
கதவைத் தட்டும் ஓசை
சாளரமனைத்தையும்
மூடிவிட்டு
கதவைத்திறந்தேன்
கைது செய்ய
பயங்கரவாதிகள்
நின்றிருந்தனர்
இக்கவிதையை
எழுதியதற்காய்!

-சகா..
09/09/2018

போராடுவோம்..

பொறுப்புணர்ந்து செயல்படுவோம்
நாம், உயிரின் மதிப்பறிந்து
பொறுமையடைவோம்
வெற்றிபெற போராட்டம்
கைகொடுக்கும்-தீர்வை
வெறியாட்டம் வெற்றிடமாக்கும்
தண்மையடையுங்கள்
தமிழர்களே-தலைநிமிர
அறிவுமட்டுமே வழிவகுக்கும்

-சகா..
15/09/2016
'Forgive others, not bcz they
deserve it, but bcz we deserve it'
-Jonathan Hule.

ரயில் காத்தாடி..

தொடர்வண்டி
காற்றாடிகளுக்கு
எழுதுகோலை
அவ்வளவு எளிதில்
பிடித்துவிடுவதில்லை!
சுற்றச்சொல்லி
தன்மீது எழுதுகிறது
இல்லையேல்
சுற்றாத
தன்னைப்பற்றி
எழுதிவிடுகிறது!

-சகா..
19/09/2018

கடவுளின் சுயசரிதையிலிருத்து!

பெண்களே என்னை
தொட்டுவிடாதீர்
நான் ஆண்களுக்கானவன்
ஆண்களால்
உருபெற்றவன்
தாழ்ந்த சாதிகளே
என்னருகே வந்துவிடாதீர்
நான் உயர்சாதிக்கானவன்
உயர்சாதியால்
உருவாக்கப்பட்டவன்
தமிழ்மொழியே
என்காதில்வந்து நுழைந்துவிடாதே
நான் புரியாமொழிக்கானவன்
அப்புரியாமொழியை
வாழவைப்பவன்
கடவுளின் சுயசரிதையிலிருத்து!!
-சகா..
16/10/2018

கஜா கொடுத்த பரிசு..

நிலம் பார்த்து
நீர் பார்த்து
பயிர் செய்த
கண்களெல்லாம்
சாலை பார்த்து
நிற்கிறதே!
பூமி பார்த்தே
வேலைசெய்த
எம்மக்களின்
கைகளனைத்தும்
இன்று
கொடுப்பார்
தேடி அலைந்து
வானம் பார்கிறதே!

-சகா..
23/11/2018

புயலின் இலை மோகம்..




நீ கொண்டுசென்ற
எங்கிளைகளுக்கீடாய்
வெண்மேகங்களை
தருகிறாயோ!

-சகா..
10/12/2018

ஈகை ஒரு குழந்தையின் பண்பு..

தன்
சின்னஞ்சிறுவயதில்
ஆசையுற்றும்
தனக்கு கிடைக்கா
பொருளொன்றை
பெரியவனானதும்
தன்மகனிற்கு
வாங்கிக்கொடுத்தான்
'எளிமையென
ஒருநாளைய
பொழுதையும்
கடினமென
மறுநாளைய
பொழுதையும்'
கடக்கும் அப்பாவி
அப்பா ஒருவன்!
அப்பொருள்பெற்று
இல்லம் வருகையில்
தன்திரு மேனிகொண்டு
சட்டை கிழிசல்களை
மறைத்தவண்ணம்
மெதுவாய்
'பசிக்குது
ஏதாவது
கொடுங்க'வென
விம்மிய குரலில்
கேட்டவனின்
கண்களில்
தெரிந்த ஏக்கத்தை
அறிந்தான்
பொருள்பெற்ற மகன்!
ஏங்கித்தவித்த
மனமறிந்து
அவ்வேக்கம் போக்க
தன்பொருளீக
முடிவெடுத்தானவன்!
அப்பனுக்கோ
மனமில்லை
அம்மைக்கோ
மனமிருத்தும்
அனுமதியில்லை!
பொருள் கொடுத்த
மகிழ்வைவிட
அப்பொருளீக
முடியவில்லையென
தானும் ஏங்கவே
முளைக்கத்துடித்த
அம்முதல்
மனித விதையும்
தன்னலத்திற்கு
உரமானது!

-சகா..
03/03/2019

சா’தீ’

சாதிக்கொடுமைக்கு
கொலையுண்டது
அவன் மட்டுமல்ல
நம்மின்
மனிதமும்தான்
விதவையானது
அவனின்
மனைவி மட்டுமல்ல
நம்மின்
பெண்களும்தான்
ஏனெனில் இறந்தது
நம்மின்
ஆண்மையும்தான்!

-சகா..
15/03/2016

பசலைக் கொடியின் காதல்..




நற்றிணையில்
நற்றாய் ஒருவர்
தம்மகளைப் பிரிந்த
பொழுதில்
'உன்னைப்பிரிந்து
வயலைக் கொடியும்
வாடுகிறதே'
என்று புலம்பி
தன் மகளின் தோழியிடம்
கேட்கிறார்,
தோழியோ
'வயலைக் கொடி
வாடினாலென்ன
அவள், அவளின்
அன்பு தோழனிடமே
இருக்கட்டும்'
என்கிறார்!
(அப்படிப்பட்ட பெண்ணை பிரிந்து வாடிய வயலைக்கொடியின் உறவினர் படம்தான் இது. தற்பொழுதைய பெயர் பசலைக் கொடி! )

-சகா..
19/04/2019

தலைக்கேறிய பனித்துளி..




முருங்கை இலையேறிய
பனித்துளியும்!
அப்பனித்துளியேறிய
ஒளிக்கற்றையும்!
அவ்வொளிக்கற்றையேறிய
காட்சிக்குவியமும்!

-சகா..
07/08/2019

ஒரு செல் உயிரியின் உறவினரே நாம்..




கடுங்காற்றும்
மழையும் இணைந்து
அமிலமென திரண்டு
பின்னது
மின்னலால்
மின்னூட்டப்பட்டு
அமினோஅமிலமாகி
ஒருசெல் உயிரியை
படைத்தனவே!
அம்முதல்-மூத்த
ஒருசெல் உயிரிக்கு
நீ எத்தனையாவது
பிள்ளையென சொல்லேன்!?

-சகா..
09/08/2019

நீரின் காதல்..



புரத இழைகளை
முத்தமிட்ட
நீர்த்துளி!
விலக மனமின்றி
மயங்கி
மயக்கி
நிற்கிறது!
சிலந்தி வலை (spiderweb) made up of fibroin!

-சகா..
20/07/2019

இடையூறற்ற உலகம்..



முதல் மழையின்
முதற்துகளுக்கும்
அதனைத்தொடர்ந்த
மின்னலுக்குமான
இடைவேளைதான்
உயிர்களற்று
இடையூறுகளற்று
இவ்வுலகம்
உருண்டுகொண்டிருந்த
கடைசிப்பொழுது!

-சகா..
22/07/2019

விசிலின் சத்தம்..

விசிலின் சத்தங்கள்
சிலவேளைகளில்
பதட்டமுறத்தான்
வைத்துவிடுகின்றன
கும்மிருளில்
தம் தடம்பதியாமல்
மெல்ல நகரும்
மண்புழுக்களுக்கு!
எங்கே இவ்விசில் சத்தம்
தன்னிருப்பை
தன்னையுண்ணும்
கழுகுகளுக்கு
காண்பித்துவிடுமோ
என்றொரு
அச்சம் அவைகளுக்கு!
அப்படியானதொரு
அச்சத்தினால்தான்
நானும் இவ்வாழ்வை
மண்புழுபோல்
நெளிந்து கடக்க
முற்படுகிறேன்!
சிலவேளைகளில்
கழுகை எதிர்கொள்ள
துணியும் நான்
எவ்வேளையிலும்
விசில் சத்தங்களை
எதிர்கொள்ள
பயிற்றுவிக்கப்படுவதில்லை!
- சகா..
09/08/2019

ஆற்றாமை என்றொரு ஆயுதம்..

ஆற்றாமையால்
துளிர்விட்ட
கருத்தானது
இருமுனை கூர்
கொண்டது!
ஓர் முனை
தன் ஆற்றாமைக்கு
காரணமானவர்களை
குத்திக்கிழிக்க!
மற்றொரு முனை
தன் ஆற்றாமையை
அறிந்தவர்களின்
வாயை தைத்து மூட!

-சகா..
09/08/2019

தடையற்ற பொழுது...

இன்று உனக்குத்
தடையில்லை!
இதோ
இந்நிறத்தின்
சேர்மானத்தை
கண்டுகளி
இன்று உனக்குத்
தடையில்லை!
இதோ
இந்நீரின்
ஓசையை
கேட்டுணர்
இன்று உனக்குத்
தடையில்லை!
இதோ
இவ்வுணவின்
சுவையை
தின்றுருசி
இன்று உனக்குத்
தடையில்லை!
இதோ
இவ்வாடையின்
அழகை
அணிந்துபார்
இன்று உனக்குத்
தடையில்லை!
இதோ
இவ்விடத்தில்
வாழ்ந்து
இன்பம்பெறு
இன்று உனக்குத்
தடையில்லை!
குறித்துக்கொள்
இன்று மட்டுமே
உனக்குத்
தடையில்லை!
தடையைவிட
இன்றைய
ஒருநாளைய
தடையற்ற பொழுது
பதற்றமடையவே
செய்கின்றன!
-சகா
14/08/2019

பட்டாம்பூச்சி..




இந்த பட்டாம்பூச்சிகள்
உலகின் இரு
முற்றிலும் வேறுபட்ட
நிகழ்வுகளை
தொடர்புபடுத்திக்கொண்டேதான்
இருக்கின்றன!
இதோபாருங்கள்
இப்பொழுது கூட
நீங்கள்
தொட்டு, தடவி
விரித்து, குவித்து
கண்டுகொண்டிருக்கும்
பட்டாம்பூச்சி,
உங்கள் அலைபேசிக்கு
புவிவெப்பமயமாதலை
தொடர்புபடுத்துகிறது!
-சகா..
07/10/2017

சத்தமாய் அழுகிறேன்..

நான் சத்தமாய் அழவேண்டும்
என் அழு குரல் உலகம் முழுதும் கேட்க வேண்டும்,
சாதிய வன்மத்தில் மாய்ந்துபோன
என் உடன்பிறவா சகோதரர்களுக்காய் அழவேண்டும்,
கொடியவர்களின் காம இச்சைக்காய் மறைந்து போன
என் உடன்பிறவா சகோதரிகளுக்காய் அழவேண்டும்,
மனிதனை மடையனாக்கிய மதத்திடம்,
அறியாமல் அடிமைப்பட்ட-
என்மின உறவுகளுக்காய் அழவேண்டும்,
கலாச்சாரம், கலாச்சாரம் என்றுசொல்லி
அறிவியலை எட்டிநின்றும் அனுபவிக்கமுடியா
என் முன்னவர்களுக்காய் அழவேண்டும்,
ஆம், நான் சத்தமாய் அழவேண்டும்...!
என் வயது ஐந்தானாலும், பத்தானாலும்
என் முன்னவன் எனக்கிட்ட சாதிய போர்வையால்,
‘என்னை மரியாதையாய் கூப்பிட்ட
பாப்புவையும், பாளையனையும் இன்ன பிறவர்களையும்
மறியாதையற்று
கூப்பிட்ட என் சிறுவயது மடமையை நினைத்து
நான் சத்தமாய் அழவேண்டும்...!’
அய்யகோ....
நான் சத்தமாய் அழவேண்டும்...!
என் அழு குரல் உலகம் முழுதும் கேட்க வேண்டும்..!
என்னை மன்னியுங்கள்,
அம்மா பாப்புவும், அய்யா பாளையனும்,
என்னை மன்னியுங்கள்...!
இம்மூடச்சமூகத்தினூடே பிறந்த
நாம் ஒவ்வொருவரும் அழவேண்டியவர்களே..!

-சகா..
04/12/2014



காலை
கதிரவன்
நன்பனி
சிறுகுளிர்
குறுஞ்சூடு
வாடைக்காற்று
பூமணம்
தேனிசை
இவை
யாவும்
இனிதே!
அனைத்தையும்
எப்பொழுதிலும்
உணர்த்தும்
இப்படம்
அதனினும்
இனிதே!
-சகா..
05/01/2020

சொர்க்கம் உணவிலே...



சாயுங்கால
பொழுதிலே
சாமரசி
ஆஞ்சிவந்து
விடியுமுன்னே
கைகுத்தலா
உமிய நல்லா
பொடச்செடுத்து
அரிசிமட்டும்
வந்தபின்னே
கல் நீக்கி
காயவச்சி
அதபின்ன
ஊரவச்சி
மண்பானையில
சமச்செடுத்து,
நாட்டுமாட்டு
பால
சுண்டவச்சி
ஒற ஊத்தி
கெடச்ச
கெட்டிதயிரு
ரெண்டு
கரண்டி
அதிலிட்டு,
அஞ்சு வெரலும்
படும்படியா
மைய பெசஞ்சி,
எலும்பிச்ச
ஊறுகாய
தொட்டுகிட்டே
வாயில போட்டா
சொர்க்கமாவது
நரகமாவது
அது எதுக்கு
செத்தபின்னே -
இந்த வாழ்க்கையே
சொர்க்கந்தான்னு
சொக்கிதானே
நிப்பீக!

-சகா..
17/01/2020

பண்பற்றான் ஏதுமற்றான்..

பண்பறுக்கும்
பக்குவம்
பாழாய்ப்
போனதற்கு
இந்த கல்வியும்
ஓர் காரணியே!
பண்பு,
வயதையும்
அது கொடுக்கும்
பக்குவத்தையும்
பொறுத்ததென்றால்,
ஊட்டி உருள
ஊட்டி உருள
இனிக்காது
திதிக்காது
ஊட்டி உருள
ரெண்டு கிலோ
அம்பது மட்டுமென
குரல்வளை
கிழிய கத்தும்
தன்முதல்
பொதுத்தேர்வை
அன்றே
எழுதிவந்த-
அந்த
அப்பாவை
இழந்தவனின்
அன்றைய
சேமிப்பிலிருந்து
இருநூறை
வரியென
பிடுங்கும்
மிடுக்கு
மீசைக்காரனின்
பண்பு
எங்கேபோனது?
ஆண்குரலும்
பெண்ணுடலுமான
திருநங்கைகள்
கண்கலங்க
எள்ளிநகையாடும்
நடுவயதென
தன்மரியாதையும்
கேட்டு
வாங்குபவனின்
பண்பு
என்னானது?
கண்மரித்த
முதிர்கிழவி
கூடையில்,
கத்திரிக்காய்
இரண்டை
சலனமின்றி
திருடும்
அவ்விளவயது
ஆணின்
பண்பு
கெட்டதெப்பொழுது?
இதுவன்றோ
பண்பு! -(எனில்)
பொதுத்தேர்வுக்கும்
தகுதிபெறா
ஒரு
சின்னஞ்சிறு
பொடியனொருவன்
கேட்டுக்கொண்டே
செல்கிறான்
வழிநெடுகிலும்
"காய்கறி
விக்கிறவங்கலாம்
எப்பமா
வீட்டுக்குபோயி
சாப்டுவாங்க!"
கெடா பண்பு
எங்கென
தேடியபொழுது
ஒரு
காய்கறி
சந்தையில்!
நீங்கள்
தலைகீழ்நின்று
கீழிருந்து
மேலாய்
இக்கவிதை
படிப்பினும்
மாறுவதாயில்லை
கல்வியும்
அக்கல்வி
கொடுக்கும்
பண்பும்!
- சகா..
01/02/2020

இறப்பிலிருந்து ஒரு பிறப்பு..



ஆண்டுக்கு
ஐந்தாறு
நாட்களேனும்
முழு இரவு
தூக்கம்
கெடுவதுண்டு!
அதில் பல
மகிழ்தருணங்களாயினும்
ஒன்றேனும்
இறப்புக்கென்றாவது
வழக்கம்!
அவ்விறப்பால் கெட்ட
தூக்கம் மட்டுமே
ஏதோவொரு
புத்துணர்வு
கொணர்வதுண்டு!
காட்டுத்தீக்கு
இரையான
பெருமரங்களின்
சாம்பலைத்
துளைத்து
துளிர்க்கும்
செடிகளைப் போல!

-சகா..
06/02/2020

துளிர்க்கும் மனிதம்..!



சாம்பலான
மரக்கட்டைகளூடே
துளிர்த்த இலைகளைக்
கண்ட நான்
குதூகலிக்கிறேன்!
என்றோ யாராலோ
உருவப்பட்டு
சருகாகி மணல்மீது
கிடத்தப்பட்ட
இலைகளை
நினைத்து
வருந்தியிருக்கிறேன்!
இலைகளற்ற
மொட்டை கிளைகள்,
சூரிய ஒளித்துகள்களை
தனியாய்
தாங்கி நிற்பதை
நினைத்து
கன்னங்கள்
நனைத்திருக்கிறேன்!
ஒரு பின்பனிகால
காலையில்
அக்கிளைகளும்
வெட்டப்பட்டதை,
என்னை சுற்றிய
மனித கூட்டத்தின்
கூச்சலில்
புரிந்துகொண்டு
வெம்பியிருக்கிறேன்!
அன்று மாலையே,
வெட்டப்பட்ட
பட்டமரக்கிளைகள்
யாவும்
என்மீது கிடத்தப்பட்டு
மரங்களுடன்
மரங்களாய்
எரிக்கப்படுவதை
கண்ணீர் காய்ந்த
கண்களின் வழி
கண்டும்காணாமலும்
காலம் கடத்தியிருக்கிறேன்!
சரியாய்
ஐந்தாறு நாட்களே
கடந்திருந்தபொழுது
'நெல்லு வீடுவர நேரத்துல
பெஞ்சி கெடுத்திடுச்சே
இந்த எலவு மழ' -
என்ற குரல் கேட்டு
திடுக்கிட்டு விழிக்கிறேன்
என்தலையிலிரு
இலைகளுடன்,
யாரோ புண்ணியவான்
இட்ட உரத்தினாலும்
பெய்த மழையினாலும்!

-சகா..

11/02/2020 

மகிழ்திகழ் காலை..



நறு
காலை புலர்ந்தது
பெரு
வாகை மலர்ந்தது
சிறு
அகவல் ஒலிர்ந்தது!
கரு
மேகம் குளிர்ந்தது!
இறு
பாலை தளர்ந்தது!
எரு
தோலும் சிலிர்ந்தது!
குறு
தோகை விரிந்தது!
அரு
புன்னகை ஒளிர்ந்தது!
உறு
ஈகை கொணர்ந்தது!
அறு
தீமை அகன்றது!

-சகா..
23/06/2020