திங்கள், 18 மே, 2026

நான் பெரியவனாகிவிட்டேன், அம்மா..

 இப்பொழுதெல்லாம் முன்பு போல் இல்லையம்மா..

நான் பெரியவனாகிவிட்டேன், என்றேன்..

நம்பாதவராக, அம்மா கண்ணை சுருக்கி முறைத்தார்..

..

நம்புங்கள் அம்மா.. உண்மைதான்..

இப்பொழுதெல்லாம்

ஒட்டப்பட்ட ஒரு பெட்டியைத் திறக்க

சமையலறைக்குச் சென்று கத்தியைக்கொண்டுவந்து

கத்தரித்துதான் திறக்கிறேன்..

அவ்வளவு ஏன்,

புதுச்சட்டையில் தொங்கும் நைலான் கயிற்றைக்கூட

அப்படிதான் துண்டிக்கிறேன்..

இன்னுமா நம்பவில்லை நீங்கள்..

இதற்கெல்லாம் மேலாக ஒன்று சொல்லவா, அம்மா

இருப்பதிலேயே குறைவான விலையில்தான்

இப்பொழுதெல்லாம் உடுப்புகளை வாங்குகிறேன்..

..

புன்முறுவலை தாளித்துக் கொட்டி

என்னுடைய இந்த நாளை இறக்கிவைக்கிறார், அம்மா..


சகா..

19/05/2026

வியாழன், 2 ஏப்ரல், 2026

மனிதர்களும் துளிர்க்கிறார்கள்..

மேகத்தைப் பிழிந்து

கடைசி பனித்துளியை

பெய்கிறது வானம்..

முன்னதாகவே பூத்து

தங்கள் கூட்டத்தை

தட்டியெழுப்புகிறது பூ..

நேற்றுவரை உறைக்காது

உறைந்திருந்த பனித்துளியை

நீர்த்துளியாக்குகிறது வெயில்..

பச்சை படர்ந்து

உறங்கிக்கொண்டிருந்த மலையை 

புன்னகைக்கவைக்கிறது நீர்த்துளி..

படர்ந்ததூசிகள் பறந்து

அடர்ந்தகாட்டை புதிதாய்

சுவாசிக்கவைக்கிறது காற்று..

புதுகாற்றுடன் தேடிவந்து

கூடடைந்த குஞ்சுகளுக்கு

இரையளிக்கின்றன பறவைகள்..

பாறைகளின் நெஞ்சில்

மென்மையாய் வருடுகின்றன

பசும் புற்கள்..

யாருமற்ற சுவடுகளில்

காலடிச்சத்தம் மீண்டும்..

பைசுமந்த சிறுதோள்கள்

பள்ளி நோக்கி விரைகின்றன..

மழை பெய்த பின்..

மரம் மட்டுமல்ல..

மனிதர்களும் துளிர்க்கிறார்கள்..


-சகா..

03/04/2026

வியாழன், 10 ஜூன், 2021

பொய்..

நீங்கள்
கண்டதுமில்லை
கேட்டதுமில்லை
தீர விசாரித்ததுமில்லை
ஆனால் 'உண்மை' என்கிறீர்கள்!
நான்
'பொய்' என்றுரைத்தால்
கண்டாயா
கேட்டாயா
தீர விசாரித்தாயா என்கிறீர்கள்!
உண்மையில்
உண்மைக்குதான்
கண்கள் வழி
காட்சி தேவை
செவிகள் வழி
செய்தி தேவை
மூளையின் வழி
புரிதல் தேவை!
பொய்யை
பொய்யென்றுரைக்க
உண்மையில்
குறைந்தபட்ச உண்மையேனும்
இல்லாமலிருந்தாலே போதும்!
எனவே பொய்யர்களே, இனியேனும்
நிறுத்துங்கள் உங்கள் பொய்களை!

-சகா..
03/03/2018

செயற்கை சுவாசம்..

தென்றலில்
தலைவாரி
மணல் கொண்டு
ஒப்பனையிட்டு
தன்மலர்களால்
பூச்சூடி அலங்காரமாய்
நிற்கிறது
புங்கை மரங்கள்!!
மகிழுந்தில்
அவ்வியற்கையை
ரசித்தவண்ணம்,
அதற்கு
செயற்கை சுவாசம்
கொடுத்து
சென்றேன்!
-சகா..
14/07/2018

கடவுள்..

சிலை
கடவுளென
அவதரிப்பதும்
கடவுள்
சிலையென
அவதரிப்பதும்
கடவுள்களின்
கடவுள்
கைகளில்!!

-சகா..
07/09/2018

பயங்கரவாதிகள்..

நூற்றுக்கணக்கான
சாளரங்களை
தன்னகத்தே
அடைத்து வைத்திருந்தது
அச்சின்ன பொருள்!
சரியென்று
அதிலொற்றை
சாளரத்தை
திறந்துவிட்டேன்
நாயொன்று
'நான் மட்டுமே இந்தியனென்று'
அலறிக்கொண்டிருந்தது!
அச்சாளரத்தை
மூடியவண்ணம்
மற்றொன்றை
திறந்துவிட்டேன்
பயங்கரவாதி பற்றிய
செய்தி, ஆனால்
பெயர் இடம்மாறியிருந்தது
பிடித்தவனை
தேசியவாதியென்றும்
பிடிபட்டவனை
தேசவிரோதியென்றும்!
பிழைபோலும்
என்றெண்ணி
மூன்றாம் சாளரத்தை
திறந்தவேளை
'டக் டக் டக்'கென்று
கதவைத் தட்டும் ஓசை
சாளரமனைத்தையும்
மூடிவிட்டு
கதவைத்திறந்தேன்
கைது செய்ய
பயங்கரவாதிகள்
நின்றிருந்தனர்
இக்கவிதையை
எழுதியதற்காய்!

-சகா..
09/09/2018

போராடுவோம்..

பொறுப்புணர்ந்து செயல்படுவோம்
நாம், உயிரின் மதிப்பறிந்து
பொறுமையடைவோம்
வெற்றிபெற போராட்டம்
கைகொடுக்கும்-தீர்வை
வெறியாட்டம் வெற்றிடமாக்கும்
தண்மையடையுங்கள்
தமிழர்களே-தலைநிமிர
அறிவுமட்டுமே வழிவகுக்கும்

-சகா..
15/09/2016
'Forgive others, not bcz they
deserve it, but bcz we deserve it'
-Jonathan Hule.