திங்கள், 18 மே, 2026

நான் பெரியவனாகிவிட்டேன், அம்மா..

 இப்பொழுதெல்லாம் முன்பு போல் இல்லையம்மா..

நான் பெரியவனாகிவிட்டேன், என்றேன்..

நம்பாதவராக, அம்மா கண்ணை சுருக்கி முறைத்தார்..

..

நம்புங்கள் அம்மா.. உண்மைதான்..

இப்பொழுதெல்லாம்

ஒட்டப்பட்ட ஒரு பெட்டியைத் திறக்க

சமையலறைக்குச் சென்று கத்தியைக்கொண்டுவந்து

கத்தரித்துதான் திறக்கிறேன்..

அவ்வளவு ஏன்,

புதுச்சட்டையில் தொங்கும் நைலான் கயிற்றைக்கூட

அப்படிதான் துண்டிக்கிறேன்..

இன்னுமா நம்பவில்லை நீங்கள்..

இதற்கெல்லாம் மேலாக ஒன்று சொல்லவா, அம்மா

இருப்பதிலேயே குறைவான விலையில்தான்

இப்பொழுதெல்லாம் உடுப்புகளை வாங்குகிறேன்..

..

புன்முறுவலை தாளித்துக் கொட்டி

என்னுடைய இந்த நாளை இறக்கிவைக்கிறார், அம்மா..


சகா..

19/05/2026

வியாழன், 2 ஏப்ரல், 2026

மனிதர்களும் துளிர்க்கிறார்கள்..

மேகத்தைப் பிழிந்து

கடைசி பனித்துளியை

பெய்கிறது வானம்..

முன்னதாகவே பூத்து

தங்கள் கூட்டத்தை

தட்டியெழுப்புகிறது பூ..

நேற்றுவரை உறைக்காது

உறைந்திருந்த பனித்துளியை

நீர்த்துளியாக்குகிறது வெயில்..

பச்சை படர்ந்து

உறங்கிக்கொண்டிருந்த மலையை 

புன்னகைக்கவைக்கிறது நீர்த்துளி..

படர்ந்ததூசிகள் பறந்து

அடர்ந்தகாட்டை புதிதாய்

சுவாசிக்கவைக்கிறது காற்று..

புதுகாற்றுடன் தேடிவந்து

கூடடைந்த குஞ்சுகளுக்கு

இரையளிக்கின்றன பறவைகள்..

பாறைகளின் நெஞ்சில்

மென்மையாய் வருடுகின்றன

பசும் புற்கள்..

யாருமற்ற சுவடுகளில்

காலடிச்சத்தம் மீண்டும்..

பைசுமந்த சிறுதோள்கள்

பள்ளி நோக்கி விரைகின்றன..

மழை பெய்த பின்..

மரம் மட்டுமல்ல..

மனிதர்களும் துளிர்க்கிறார்கள்..


-சகா..

03/04/2026